Saturday, October 18, 2014

அதிகாரம் 33.புல்லறிவாண்மை

புல்லறிவாண்மை [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.]

எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை; - வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின். ---------------325

விளக்க வெண்பா
புகழ்மிகு மன்றத்தின் உள்நுழைந்து; எள்ளி
இகழ்ந்தான் ஒருவன் ஒருவனை; கேட்பவன்
தாழ்ந்தமைதி காத்தால்; அதன்பின் இகழ்ந்தவன்
வாழ்ந்தால்; அதுவே வியப்பு

அதிகாரம் 40.காம நுதலியல் : [காதல் நினைவுகள்]



கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; - பின்சென்றும்
ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில்வாக்கு அறிந்து. -----------395


விளக்க வெண்பா
கண்ணைக் கயல்மீனாய்க் கண்டுகொண்டு காதலியின்
பின்சென்ற(து) அச்சிறு மீன்கொத்தி – பின்சென்றும்
கொத்த முனைந்து பயந்தோடும் பெண்புருவம்
குத்தும்வில் என்று திகைத்து

Friday, October 17, 2014

கடவுள் வாழ்த்து



வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.
​​
​விளக்கப் பா :

காலத்தின் கட்டின்றி முன்தோன்றும் வானவில்போல்;

கால்நிலத்தில் பாவாத வானவரை - வாழ்வளிக்கும்

மண்ணைத் தலைதொடத் தாழ்ந்துவணங்(கு) ’எம்உள்ளத்(து)

எண்ணம் நிறைவுசெய்’
என்று

Saturday, September 14, 2013

வழக்கு 1. நூலும் , பொதுமகளிரும் :/ நாலடியார்


-நாலடியார்-
வழக்கு 1. நூலும் , பொதுமகளிரும் ஒன்றா ? :


32.அவையறிதல்

பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; - மற்றம்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள். 317



தெளிவுரை 1: ( நன்றி : இளவழகனார் /தமிழ் இணையக் கல்விக் கழகம்)
நெறிப்பட்டுக் கற்பவர்க்கெல்லாம் நூல் எளிய, கொடுப்பவரை மனத்துட் கொள்ளாமல் தாம் பெறுகின்ற விலைப் பொருளையே கருத்தாகக் கொள்ளும் பொது மகளிரின் தோள்கள் பலர்க்கும் எளியவாதல் போல ஒரு தொடர் புற்றுக் கற்பவரெல்லார்க்கும் நூல்களின் பொதுக்கருத்துக்கள் எளியனவாய் விளங்கும்; ஆனால்; மாந்தளிர் போன்ற மேனியையுடைய அவ்விலை மகளிரின் மனம் யார்க்கும் அறிதல் அருமையாதல் போல, நூலின் உட்பொருள்கள் எல்லார்க்கும் அறிதற் கரியனவாகும்.

தெளிவுரை 2: ( நன்றி : பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் தமிழ்க் களஞ்சியம். காம் )
பெறத்தக்க பொருள்களைப் பெற்றுக்கொள்கிற பொதுமகளிர் தோள்போல, ஒரு மேற்போக்கான நெறிப்படி கற்போர்க்கு எல்லாம் நூலின் பொதுப் பொருள் எளிதில் விளங்கும். ஆனால் தளிரை ஒத்த மேனியையுடைய அந்தப் பொதுமகளிரின் மனத்தைப் போன்று, நூலின் உள்ளே பொதிந்து கிடக்கும் நுண்பொருள் அறிதற்கு அரிதாம்.

கவி.பத்மதேவன் , ஞா. மாணிக்க வாசகன் அவர்களின் தெளிவுரைகளும் இதே கருத்தையே வலியுறுத்துகின்றன


இங்கே தோன்றும் சில கேள்விகள்:
1. பேரின்பத்துக்கு வழிகாட்டும் நூல்களை , சிற்றின்பத்துக்குள் வழிநடத்தும் பொதுமகளிருக்கு ஒப்புமைக் கொண்டது சரியாமோ ?

2. கற்றுத்தரும் நூலும் , கற்பில்லாப் பெண்ணும் ஒன்றாமோ ?

3. ’மாந்தளிர் மேனிகொண்டவள் பெண் - என்றுநம்பி மயங்கி விடாதே’ என்று (நாலடியார் .41 / இதற்கான விளக்கம் தொடர்ந்து வரும்)அறிவுரைக் கூறியவர்கள் , ’மாந்தளிர் மேனியாள்’ என்று பொதுமகளிரைப் பற்றிப் பாடி, தாம் சொன்னதைத் தாமே மீறும் தவறைச் செய்வாரோ ? அப்பெண்டிரின் மனம் நுண்மையானது என்றும் சொல்வாரோ ? நூலை ; பெண்ணுக்கு ஒப்பாகக் கூறி இருப்பார் என்பதையே ஏதிர்பார்க்க முடியாத பொழுது , பரத்தையருக்கு ஒப்பாக எப்படிக் கூறி இருப்பார் ????

குறிப்பு :
1.பாவில் பொதுமக்ளிரை நோக்கித் தள்ளும் பொருள்தரும் சொற்கள் இருக்கிறதே தவிர ., எங்கேயும் பொதுமகளிர் என்னும் நேரடிக் குறிப்பு இல்லை . நாலடியாரின் வார்த்தை விளையாட்டுளால் உரை ஆசிரியருக்கு ஏற்பட்ட மயக்கமே இந்த்த் தெளிவுரைக்குக் காரணம் எனக் கருதுகிறேன்
2. அதிகாரத்துக்கு ஒப்புமை இருப்பதாகத் தெரியவில்லை


எனது விளக்கப் பா :
பெறுவ(து) அணிவோரின் தோள்போன்றாம் நூல்;கற்(று)
அறியமுனைந் தால்,எளிதாய் வந்தடையும்; ஆற்றங்
கரைப்புதைமண் போல்,உள் இருப்ப(து)எல் லார்க்கும்
அறிதற்(கு) அரியதா கும்


என் விளக்கம் : கற்க நினைக்கும் அனைவருக்கும் மிக எளிதாய்
( விலைக்கோ, அன்பளிப்பாகவோ) கிடைத்துவிடும் நூல். ஆனால் , ஆற்றங்கரைப் புதைமணல் போல் , அதன் உள் பொதிந்திருக்கும் கருத்துக்கள், அதன் ஆழம், எளிதாய் எல்லோராலும் அறிந்து கொள்ள இயலாது.

அருஞ்சொற்பொருள் : ( நன்றி : சென்னைப் பல்கலைக் கழகஅகராதி )
மற்றம் =ஆற்றோரத்தில் சரிந்து தாழ்ந்துள்ள நிலம்
முறி =தளிர்.
புரை =இடம்; பூமி ;.
மேனி =உடம்பு ,வடிவம், நிறம்
உள்ளம் =மனம் ; உள்ளக்கருத்து ; சொற்றொடரின் கருத்து ; எண்ணம் ; ஞானம் ;

எது சரியான தெளிவுதரும் பொருளாய் இருக்குமென்று, பெரியோர்கள் கருத்துக் கூறக் காத்திருக்கிறேன் ..

Monday, September 9, 2013

அறிமுகம்


வாழ்க உறவுகள் .,
ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன் முதலில் ..

நான் தமிழில்
அறிஞர் இல்லை,
முனைவரும் இல்லை ..
தமிழுக்கு அறிமுகமானவன்,
தமிழின் ஆழம் அறியமுனைபவன்,
தத்தித் தத்தித் தவழும் மாணவன்... அவ்வளவே ..

திருக்குறளுக்கும் நாலடியாருக்கும் இன்றைய தமிழில், எளிய வெண்பாவில் தெளிவுரைகள் தரும் பாக்கள் சமைத்து முடித்துவிட்டேன் என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிகப் பெருமையும் மகிழ்வும் அடைகிறேன் ..

அந்த நெடும்பயணத்தின் முடிவில்....
திருக்குறள் / நாலடியாருக்கு இன்று நம்மிடம் இருக்கும் நம்முன்னோர்களின் விளக்கங்கள்/ தெளிவுரைகளில் இருந்து நான் 150க்கும் மேற்பட்ட இடங்களில்... ஒரு வார்த்தையிலோ / மொத்தப் பாவுக்கான விளக்கத்திலோ மாற்றுக் கருத்துகளைக் கொண்டுள்ளேன் .. அதுபற்றிய என்னுடைய கோணத்தை ’நக்கீரன் வீட்டுக் கைத்தடி’யாய் ...உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே...

விளக்கங்களில் தவறுகளைக் ( அப்படி ஒன்று இருந்தால்... ) களைய வேண்டுமென்று , இங்கே நான் எடுத்துவைக்கும் கருத்துகளில் சில, ஆர்வக்கோளாறின் காரணமாக, தவறாகக் கூட இருக்கலாம். சான்றோர்கள் அதைப் பொறுத்து , சுட்டிக்காட்டித் திருத்த வேண்டுகிறேன் ...

அதுபோலவே .. எனது வாதத்தையும், கருத்துகளையும் சிறிதேனும் கணக்கில் கொண்டு, நீதியரசராய் நின்று இரு தரப்பு விளக்கங்களையும் ஆராய்ந்து, நல்ல தீர்ப்பளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்